Saturday 14 May 2016

வாக்களிப்போம் நேர்மையாக!


இன்று நீங்கள் சுதந்திரமாக பேசமுடிகிறது, எழுத முடிகிறது, வலை பதிவுகளை இட முடிகிறது. ஏன் உங்கள் நண்பரில் இருந்து நம் பிரதமர் வரை கலாய்ப்பதற்கு  மீம்ஸ் பதிவிட முடிகிறது என்றால் அதற்கான காரணம் ஒன்று தான் நாம்  ஜனநாயக நாட்டினர் என்பதே. நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க தயார் பொழுது கழிக்க தயார் ஆனால் உங்களுடைய ஜனநாயக கடமையாற்ற மட்டும் நீங்கள் தயார் இல்லை. காரணமோ  தெரியவில்லை! உங்களின் அத்துணை உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு உரிமை உண்டெனில் அது ஜனநாயகத்தின் திறவுகோலான வாக்குரிமை. அது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட. முன்  எப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் ஆணையமும் மிக கடுமையான விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கி உள்ளது. சமுக வலைதளமாக இருக்கட்டும் , கல்லூரிகளாக இருக்கட்டும், பொது மக்கள் கூடும் இடமாக இருக்கட்டும் அது தன் பணியை செய்து கொண்டு தான்  இருக்கிறது. ஆனால் திரை அரங்குகளில் படம் பார்க்க எத்துனை பெரிய வரிசையில் நிற்க தயாராக இருக்கும் நம்மால் , சமூக வலை தளங்களில் உலாவ தயாராக இருக்கும் நம்மால். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பொழுதை போக்க தயாராக இருக்கும் நம்மால்  வாக்களிக்க சில மணி துளிகளை செலவு செய்ய தயாராக இல்லை. ஒன்றை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் சுதந்திர  காற்றை சுவாசிக்க காரணம்  ஜனநாயகம். ஜனநாயகத்தை சரியாக பயன் படுத்தினால் தான் நீங்கள் சுதந்திரமாக வாழ இயலும். மேலும் நான் இந்த பள்ளியில் தான்  இந்த கல்லூரியில் தான் படிப்பேன், இந்த உடையை தான் அணிவேன், இதை தான் உண்ணுவேன், இந்த பொருளை தான் பயன் படுத்துவேன், இந்த இடத்தில தான் வேலை செய்வேன் என்று கூறும் நீங்கள், ஏன் உங்களை இவர்கள்  தான் ஆள வேண்டும் என்று விரும்புவது இல்லை. மேலும் வாக்களிக்க பணம் தருவது மட்டும் அல்ல பெறுவதும் குற்றம். நீங்கள் பணம் பெறுகிறிர்கள் என்றால். நீங்கள் அவர்கள் செய்த/ செய்ய போகும் பாவங்களுக்கு உங்களுடைய பங்கினை கேட்கின்றீர்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள்  எப்பொழுது லஞ்சம் பெற நினைத்தீர்களோ அப்போதே நீங்கள் உங்களின் அத்துணை உரிமைகளும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் சமூகத்தின் கொள்ளைக்காரனாகிவிடுகிறீர்கள். எனவே இந்த எண்ணத்தை மாற்றி வாக்களிப்பதற்கு பணம் பெறுவது தனது தன்மானத்தை விற்கும் இழி செயல் என கருதி நேர்மையாக வாக்களிக்கும் படியும், நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களின் பெற்றோர்கள் நண்பர்கள், உறவினர்களையும் நேர்மையாக வாக்களிக்க வைக்க வேண்டியதும் உங்களின் கடமை என்பதை உணருங்கள். இந்த முறையேனும் 100 சதவிகித வாக்கினை  நேர்மையாக அளித்து நம் ஜனநாயக கடமையை ஆற்றுவோம். வாக்களிப்போம் நேர்மையாக!.......

No comments:

Post a Comment