நம் நாட்டில் இன்று அதிக அளவு ஊழலும் லஞ்சமும் பெருகி இருப்பதற்கு காரணம் அதிகாரிகள் மட்டும் இல்லை மக்களாகிய நாமும் தான். அவர்கள் கேட்டதால் தான் பணம் கொடுத்தாக வேண்டி உள்ளது என்று கூறுபவரா நீங்கள்? உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று இனியாவது உணருங்கள். நான் அதிகாரிகளுக்காக உங்களை குறை கூறவில்லை உண்மையை எடுத்துரைக்க விரும்பிகிறேன். உங்களுக்கான அவசரத்தையும் உங்களுடைய காலதாமதமும் தான் அதிகாரிகளின் பிளஸ். நாளை சமர்பிக்க வேண்டிய விண்ணப்பத்திற்கு இன்று தான் பலர் அரசு அலுவலகம் சென்று அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இன்னப்பிற விஷயங்களுக்காக அந்த அதிகாரிகள் முன் நின்றால் உங்களின் அவசரத்திற்கு ஏற்ற ஒரு விலையை (லஞ்சம்) நிர்ணயம் செய்கின்றனர். இங்கு விலை என்பது உங்களின் அவசரத்திற்கு கொடுக்கும் லஞ்சம். அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்பு காலாவதியான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க தவறி நீங்கள் என்றேனும் காவல் துறைக்கு(லஞ்சம் அல்லது அபராத தொகைக்கு) பயந்து புதுப்பிக்க அதிகாரியிடம் சென்றால் உங்களின் கால தாமதத்திற்கு என்று ஓர் விலை (லஞ்சம்). உங்கள் காலதாமதத்திற்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அது போல் உங்களின் பொறுப்புணர்ச்சி அற்ற செயலும் தான் காரணம் உங்களுடைய கவன குறைவால் ஏதேனும் ஒருமுக்கியமான சான்றிதழை வீட்டில் வைத்து விடுவது அல்லது அந்த சான்றிதழ் வாங்காமலே விட்டு விடுவது போன்ற காரணங்களுக்காக நீங்கள் கொடுக்கும் விலை தான் லஞ்சம். அந்த விலை (லஞ்சம்) உங்களின் சான்றிதழ் இல்லாமையை பொருத்து மாறுபடுகிறது. நம் அரசு சான்றிதழ்களை, சான்றிதழ்களை பொருத்து இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விடவேண்டும் என்று ஒரு வரைமுறையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் புதுப்பிக்க தவறிய சான்றிதழ்களையும் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வேறு தந்துள்ளது. அது மட்டும் அல்லாது இப்போது ஆன்லைன் வசதியை பயன் படுத்தி அரசு, மக்கள் எளிதாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணைய சேவைகளை வேறு வழங்கி வருகிறது. இருப்பினும் நான் லஞ்சம் கொடுத்து தான் சான்றிதழ்களை பெறுவேன் என்று உங்கள் பணத்தை விரயமாக்குவதை மக்களாகிய நம்முடைய முட்டாள்தனம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அட என்னப்பா இது, அந்த அதிகாரி எல்லாம் சரியாக இருந்தும் லஞ்சம் கேட்க்கிறார் என்கிறீர்களா? இருக்கவே இருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்ப்பு துறை உங்கள் புகாரை அந்த துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1800-11-0180 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது http://cvc.nic.in/ என்ற இணைய முகவரியிலோ சென்று உங்கள் புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிப்பது மூலம் ஒரு நல்ல இந்திய குடிமகனாய் நம் கடமையை சரியாக செய்தோம் என்ற ஓர் உணர்வை பெறலாம்.மேலும் நம் சான்றிதழ்களையும் பெறுவதோடு நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டிய ஓர் ஊழல் பெருச்சாளியை விரட்டி, இனி சுரண்டாமல் தடுத்தோம் என்ற மகிழ்ச்சியை பெறலாம். சரி அந்த அதிகாரி லஞ்சம் கொடுக்காததால் வேண்டும் என்றே தாமதம் செய்கிறார் என்றால் என்ன செய்ய என்கிறீர்களா? இதோ அதற்கும் வழி இல்லாமல் இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உங்கள் புகாரை சமந்தப்பட்ட துறையின் சமந்தப்பட்ட அதிகாரிக்கு தரலாம். அப்படியும் நடவடிக்கை இல்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெற்று ஆதரங்களை திரட்டி நீதி மன்றங்களை அணுகி வெற்றி பெறலாம். இதெல்லாம் சரி இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டுமே என்கிறீர்களா? அதை நம் மக்கள் பிரதிநிதிகளும், மக்களுக்கு என உள்ள அதிகரிகளும் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவகத்திலும் பெறக் கூடிய சான்றிதழ்கள் என்ன, அவற்றை பெறக்கூடிய வழிமுறை என்ன, அவற்றை பெற தேவையான ஆவணங்கள் என்ன, அவற்றை எத்தனை நாட்களில் பெற முடியும், புகார் தர வேண்டிய அதிகாரியின் பதவி, முகவரி, அலுவலக எண், மற்றும் வலைதள முகவரி, லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் எண் வலைதள முகவரி போன்ற தகவலுடன் கூடிய பதாதைகளை மக்களின் கண்களுக்கு தெரியும் படி அலுவலகங்களில் இருக்க செய்தல் வேண்டும், மேலும் மக்களிடம் இது குறித்த மேலும் சில விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் மட்டும் அல்ல மக்களாகிய நம்முடைய பொறுப்பும் கூட. இன்று முதலேனும் நாம் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன் என்று உறுதி ஏற்போம். "இந்திய குடிமகனாகிய நான் இன்று முதல் லஞ்சம் பெறவோ அளிக்கவோ மாட்டேன்" என உறுதி கொள்கிறேன். உறுதி ஏற்றால் மட்டும் போதாது அதை நெஞ்சில் நிறுத்தி கடைபிடிக்கவும் வேண்டும். கடைபிடிப்பீர்களா?