தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சட்ட பேரவையில் சொல்லும் நாளிற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நடைபெற்ற கொலைகளை கண்டால் தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை, கொலை மயாணமாக(?) மாறி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதுவும் நுங்கம்பாக்கம் ஸ்வாதி அவர்களின் படுகொலை சென்னையில் மனிதாபி மானிகள் இன்னும் வாழ்கிறார்களா? என்ற கேள்வி நம் முன் வந்து செல்கிறது. அதிகாலை பொழுதில் எப்பொழுதும் போல தன் அன்றாட வேலைகளை கவனிக்க தான் அலுவலகத்திற்கு புறப்பட்ட ஸ்வாதி அவர்களுக்கும் அவரை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து விட்ட அவர் அப்பாவிற்கும் தெரியாது, நாம் அன்றாடம் மனிதாபிமானம் அற்ற ஜந்துக்களுடன் (மன்னிக்கவும் மனித தன்மை அற்ற எவரும் மனிதன் அல்ல என்றே இதுகாறும் நான் படித்த கேட்ட அறிவு) தான் பயணிக்கிறோம் என்று. அன்று ஒருவர் அல்லது இருவர் இணைந்து குரல் கொடுத்தாவாது அதனை தடுக்க முற்பட்டிருக்கலாம். இதில் இருந்தே நம்மவர்களிடம் மனிதபிமானமும் இல்லை, ஒற்றுமையும் இல்லை, என்று அறிய முடிகிறது. அட! ஐந்து அறிவு ஜீவிகளிடம் கூட ஓற்றுமை உள்ளது. முன்பு ஒரு முறை அநேகமாக 2011 ஆண்டு ஆட்சி பொறுப்பில் முதல்வர் அவர்கள் அமர்ந்த போது கொள்ளையர்களும், கொலையாளிகளும் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர். இனி தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படும் என்ற வார்தைகளை உதிர்த்த நியாபகம். அப்படியானால் அந்த கூலி படையினருக்கோ அல்லது அரசின் அனுமான படி கூலி படை அல்லாதவற்கும் துணிச்சல் பிறந்து விட்டதா? துணிச்சல் பிறந்து விட்டது என்றால் அதற்கு காரணம் யார்? அதற்கு மக்களின் அரசு மட்டும் காரணம் அல்ல மக்களாகிய நாமும் ஓர் காரணம் தான் நகரமயம் ஆன பிறகு சென்னையில் கலாச்சாரம் மட்டும் அல்ல மனிதாபிமானமும் குறைந்து விட்டது (அழியவில்லை!) என்றே இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. இதை பயன் படுத்தியே கூலி படையினரும் தமிழகத்தில் தன் கை வரிசையை காட்ட துவங்கி உள்ளனர். இத்துணை கொடூர கொலையை தடுக்க முன் வராத உங்களை தான் சென்னை பெரு வெள்ளத்தின் போது எத்துணை எத்துணை மனிதாபிமானிகள் தமிழகதின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்து தமிழகத்தில் என்றுமே மனிதாபிமானம் சாகாது என்று உணர்த்திவிட்டு சென்றனர். ஆனால் இன்று அதே சென்னையில் அத்துணை பேர் முன்பு பட்ட பகலில் மனிதாபிமானம் அற்ற முறையில் மனிதாபிமானம் உள்ள ஒரு பெண்ணிற்கு ஓர் கொடூரம் நடக்கிறது அதை தடுக்க அங்குள்ள எந்த சென்னை வாசிகளும் முன் வரவில்லை. அன்று நீங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது உங்களை போன்று அன்று யாரும் உதவ முன் வரவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கனம் நினைத்து பாருங்கள். பொதுவாக செய்த நன்றியை சொல்லிக்காட்டும் வழக்கம் இல்லாதவர்கள் தமிழர்கள் ஆனால் நம் கண் முன்பே தன் மக்களின் மனிதாபி மானம் இழப்பதை கண்டு கனத்த இதயத்துடன் தான் இதை இங்கு நினைவு கூறுகிறேன். இந்த நிகழ்வு மட்டும் அல்ல இது போன்று எத்தனை எத்தனை ஸ்வாதிகள், என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அதில் ஸ்வாதியின் பெயரும் இடம் பெறுமே ஒழிய, மக்களின் மனதில் மனிதாபிமானம் இடம் பெறபோவதில்லை(?). வசிப்பிடம் தான் நகரமயம் ஆகி வரலாமே ஒழிய மனித மனதில் மனிதாபிமானம் அழிந்து நகரமாய் ஆகி விட கூடாது. அப்போது தான் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாகவும், சென்னை சிங்கார சென்னையாகவும் இருக்கும் என்பதை உணருங்கள். இந்த தருணத்திலும் எனக்கு ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது அது வைகை புயல் வடிவேல் அவர்களின் நகைச்சுவை "உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?". சென்னை வாசிகளே. ஒரு கனம் நினைத்து பாருங்கள் உங்கள் மனமே உங்களை வறுத்து எடுக்கும். இனியேனும் மனிதாபிமனதுடன் ஒன்று பட்டு செயல்பட்டு நாம் மனிதர்கள் தான், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்று உலகிற்கு உணர்த்துவோம். ஏனெனில் உலகம் அனைத்தையும் வெகு விரைவில் மறந்து விடும் நம்மைப் போல(!)..................